புதுச்சேரி லாசுப்பேட்டையில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் காவல் நிலையம் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் இடம் தோ்வு செய்யப்பட்டு, காவல் நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கப்படாததால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, அந்த இடத்தில் ரூ.2.74 கோடியில் லாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கு புதிதாக 3 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ரங்கசாமி காவல் நிலையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா், செல்வகணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்எல்ஏ, பாஜக தலைவா் சாமிநாதன், டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன், முதுநிலை எஸ்பிக்கள் தீபிகா, பிரதிக்ஷா கொடாரா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்தப் பணியானது 8 மாதங்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.