புதுவையில் சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
By DIN | Published On : 16th March 2022 12:31 PM | Last Updated : 16th March 2022 12:31 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை, முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.
புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்தாண்டு ஜனவரி முதல் தடுப்பு ஊசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முன் களப்பணியாளர்கள், முதியோர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் என படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதற்காக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
இன்று முதல் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட( 12 -14 வயது) மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
முகாமை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
புதுவையில் உள்ள சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்றார்.