புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்ச் 28, 29-ல் பொது வேலை நிறுத்தம்
By DIN | Published On : 25th March 2022 12:16 PM | Last Updated : 25th March 2022 12:16 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம், வெள்ளிக்கிழமை காலை முதலியார்பேட்டை, கடலூர் சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக அமைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு.சலிம், சிபிஎம், விசிக, சிபிஐ(எம்எல்), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க. கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கை, தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், ஏழைக் குடும்பத்துக்கு மாத நிவாரணம் ரூ.7500 வழங்க வேண்டும், மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வேலை நிறுத்தம் மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் புதுவை மாநிலத்தில் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதில் மார்ச் 29 ஆம் தேதி புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும், அன்றைய தினம் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி, அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, போராட்டத்தை சிறப்பாக முடிக்கவும் திட்டமிட்டு ஆலோசனை நடத்தினர்.