புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடல், சாலைகள் வெறிச்சோடியது

புதுவை மாநிலத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடல், சாலைகள் வெறிச்சோடியது

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை புதுவையில் மட்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிரதான தொழிற்சங்கங்கள், காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. கார், வேன், ஆட்டோக்கள், லாரிகள், டெம்போக்கள் போன்றவை இயக்கப்படவில்லை.

தமிழக அரசு பேருந்துகள் மற்றும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மட்டும் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி முழுவதும் அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி சந்தைகள், பழக் கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பிரதான சாலைகள், நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

சேதராப்பட்டு, தட்டாஞ்சாவடி, வில்லியனூர் பகுதி தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் செயல்படவில்லை. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள், எல்ஐசி, பிஎஸ்என்எல், தபால் அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளன.

இதனால் புதுச்சேரியில் கடைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயங்காமலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com