புதுவையில் நிகழாண்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.600 கோடி: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் மத்திய கலால் துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை ஆணையர் அலுவலக ஊழியர்கள் சார்பாக, 75-வது சுதந்திர விழா
புதுவையில் நிகழாண்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.600 கோடி: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய கலால் துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை ஆணையர் அலுவலக ஊழியர்கள் சார்பாக, 75-வது சுதந்திர விழா ஆண்டு நினைவை கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் சைக்கிள் பேரணி கடற்கரை காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மத்திய கலால் துறை சரக்கு மற்றும் சேவைவரி துறை அதிகாரிகள் உள்பட  100-க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

அப்போது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, புதுவை மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. 8,500-க்கும் மேற்பட்டோர் வரி செலுத்துபவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி வருவாயாக 600 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது.

இதன் மூலம் அரசு பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியும். இதனால் நாம் அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் எங்கேயும் ஹிந்தி திணிப்பு இல்லை. மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை தகவல்களும், அறிக்கைகளும் அங்கு தமிழில்தான் உள்ளது. தமிழ் பிரதானம் அதற்குப்பிறகு ஆங்கிலம்,  அதற்கு பிறகுதான் ஹிந்தி. அங்கு பணிபுரிபவர்கள் பலர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்களுக்கான அலுவலுக்கு இந்தியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜிப்மரில் பல இயக்கங்கள் போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான ஒரு அணுகுமுறை. அது ஒரு மருத்துவமனை. பல இடங்களில் இருந்தும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் 60 சதவீதத்திற்கு மேல் அவசர மருத்துவ சேவைக்கு மக்கள் வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் போராட்டம் நடைபெறுவதால் மக்களுக்கு அது இடையூறாக உள்ளது.  ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் கருத முடியும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com