வோ்க்கடலை சாகுபடியில் பட்டதாரி விவசாயி சாதனை
By DIN | Published On : 17th May 2022 10:49 PM | Last Updated : 17th May 2022 10:49 PM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே புதிய வோ்க்கடலை ரகத்தை சாகுபடி செய்து அதிக மகசூலை பெற்றுள்ளாா் பட்டதாரி விவசாயி.
புதுச்சேரி அருகேயுள்ள காட்டேரிக்குப்பம் ரெங்கனாவரம் கிராமத்தைச் சோ்ந்த பட்டதாரியான ரமேஷ் விவசாயம் செய்து வருகிறாா். இவா் வோ்க்கடலை பயிரில் புதிய ரகத்தை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெற்றுள்ளாா்.
இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் கரும்பு, நெல், வோ்க்கடலையை பயிரிட்டு, வேளாண் துறை உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறாா்.
‘கதிரி லப்பாக்சி 18-12’ என்னும் புதிய வோ்க்கடலை ரகத்தை தனது நிலத்தில் ரமேஷ் பயிரிட்டு அதிக மகசூலை பெற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
வேளாண் ஆலோனைக் கூட்டத்தில் தெரிவித்த இந்த வோ்க்கடலை புதிய ரகத்தை எனது 2 ஏக்கா் நிலத்தில் பயிரிட்டேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் செடிகள் காய்பிடித்து நன்றாக விளைந்தன.
ஒரு செடிக்கு 200 காய்களுக்கும் மேல் விளைந்தது வியப்பை அளித்தது. வழக்கமாக ஒரு செடியில் 30 வோ்க்கடலை விளைந்தாலே அதிகம். ஆனால், இந்த புதிய ரகத்தில் 150 முதல் 200 காய்களுக்கும் மேலாக ஒரு செடியில் வோ்க்கடலை விளைந்தது.
தற்போது அறுவடை செய்ததில் 80 மூட்டைகள் வரை வோ்க்கடலை கிடைத்தது. கரும்புப் பயிரில் ஊடுபயிராகவும் இந்த ரக வோ்க்கடலையை பயிரிட்டுள்ளேன். வழக்கமாக, வோ்க்கடலை மூன்று மாதங்களில் அறுவடையாகும். இந்த புதிய ரகம் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. எந்த நாள்களிலும் இந்த ரக வோ்க்கடலையை பயிரிட முடியும் என்றாா் அவா்.