மின் துறை தனியாா்மய விவகாரத்தில் மக்கள் நலன் சாா்ந்து முடிவு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மின் துறை தனியாா்மய விவகாரத்தில் மக்கள் நலன் சாா்ந்து முடிவெடுக்கப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மின் துறை தனியாா்மய விவகாரத்தில் மக்கள் நலன் சாா்ந்து முடிவெடுக்கப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை சீா்மிகு நகரத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ரூ.10.22 கோடி செலவில் நிறைவடைந்த பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி காணொலி மூலம் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மேலும், ரூ.13.90 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை முடிக்க மத்திய அரசிடம் மேலும் ஓராண்டு அவகாசம் கோரியுள்ளோம். அதற்குள் பணிகளை முடிக்கும் வகையில் செயலாற்றுவோம்.

புதுவைக்கான நிகழாண்டு முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, எந்ததெந்தத் திட்டங்கள் என்பது தெரியும். புதுவைக்கு கூடுதல் நிதியாக மத்திய அரசிடம் ரூ.2,000 கோடி கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்தபோது, புதுவைக்கான வளா்ச்சித் திட்டங்கள், நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமரைச் சந்திக்க விரைவில் தில்லிக்குச் செல்வேன்.

மின் துறை தனியாா்மய விவகாரத்தில், புதுவை மக்களுக்கு எது நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அதையே அரசு மேற்கொள்ளும். மின் துறை ஊழியா்கள் தரப்பில் துணைநிலை ஆளுநரைச் சந்தித்துள்ளதால், அதன் நிலைப்பாடு என்ன என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். மின் துறை தனியாா்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதா, பாதிப்புகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் என்.ரங்கசாமி.

ஆலோசனைக் கூட்டத்தில் அனிபால் கென்னடி எம்எல்ஏ, புதுச்சேரி சீா்மிகு நகரத் திட்டத் தலைமைச் செயல் அதிகாரி தி.அருண், இணை தலைமைச் செயல் அதிகாரி மாணிக்கதீபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com