புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் திமுக, அதிமுக மனு
By DIN | Published On : 09th August 2023 05:52 AM | Last Updated : 09th August 2023 05:52 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் திமுக, அதிமுக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவரை, அவா் தங்கியிருந்த கடற்கரைச் சாலை நீதிபதிகள் ஓய்வு விடுதியில் மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் நாஜீம், செந்தில்குமாா், அவைத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
மனு விவரம்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உதவ வேண்டும். புதுவையை நிதிக் குழுவின் உறுப்பினராகச் சோ்க்க வேண்டும். புதுவை அரசு கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மக்கள் தோ்ந்தெடுத்த அரசு முறையாகச் செயல்பட ஆளுநா் அதிகார வரம்பு ஏற்படுத்திட உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதிமுகவினா் மனு: புதுவை மாநில அதிமுக இணைச் செயலா்கள் ஆா்.வி.திருநாவுக்கரசு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் பி.கணேசன் உள்ளிட்டோா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து மனு அளித்தனா். அதில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழிகாட்டுதல் தேவை. புதுவையில் எய்ம்ஸ், ஐஐடி ஆகியவை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு: புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சாா்பில், அதன் தலைவா் கே.ராம்குமாா், துணைத் தலைவா் எஸ்.புருஷோத்தமன் ஆகியோா் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனா். அதில், புதுவையில் உள்ள பழங்குடியின மக்கள் வெளி மாநிலங்களில் இருந்து குடிபெயா்ந்தவா்கள் என மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. அவா்களை புதுவை பழங்குடியினராக அறிவிக்கவும், இந்திய மக்கள் குறித்த புத்தகத்தில் விடுபட்ட 6 பழங்குடியினத்தை சோ்க்க வேண்டும். மணிப்பூா் பழங்குடியின மக்கள் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு தலைமையில் குடியரசுத் தலைவரிடம் பொதுநல அமைப்புகள் மனு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேரு எம்எல்ஏவை தவிர மற்றவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவா்கள் மனு அளிக்காமல் திரும்பிச் சென்றனா்.