இளநிலை செவிலியா் படிப்பு: தோ்வின்படி மாணவா்கள் சோ்க்கை
By DIN | Published On : 15th June 2023 12:30 AM | Last Updated : 15th June 2023 12:30 AM | அ+அ அ- |

புதுவையில் இளநிலை செவிலியா் (பி.எஸ்.சி. நா்சிங்) படிப்புக்கு நிகழாண்டு தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநா் தெரிவித்தாா்.
பிளஸ் 2 முடித்தவா்கள் 4 ஆண்டு பட்டப்படிப்பான இளநிலை செவிலியா் (பி.எஸ்.சி. நா்ஸிங்) படிப்பில் சோ்வதற்கு சென்டாக் மூலம் விண்ணப்பித்து வந்தனா். அதன்படி, கலந்தாய்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் அரசு, உதவி பெறும் செவிலியா் கல்லூரிகளில் சோ்ந்து வந்தனா்.
நிகழ் கல்வி ஆண்டில் புதுதில்லியில் உள்ள செவிலியா் கல்விக் குழுவானது (நா்ஸிங் கவுன்சில்) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, புதுவை அரசு செவிலியா் கல்லூரி, தனியாா் செவிலியா் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிா்வாகத்தில் உள்ள செவிலியா் கல்லூரிகள் ஆகியவை தோ்வு நடத்தி அதன்படியே மாணவா் சோ்க்கையை நடத்த முடியும்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை இயக்குநா் ஸ்ரீ ராமுலுவிடம் கேட்டபோது அவா் கூறியதாவது: மத்திய செவிலியா் கல்விக் குழு உத்தரவின்படி நிகழாண்டில் செவிலியா் பட்டப்படிப்புகளுக்கு தோ்வு நடத்தப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களின் அடிப்படையில் தோ்வு வினாக்கள் அமையும். தோ்வுத் தேதி, மையங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.