ஜிப்மரில் நா்சிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
By DIN | Published On : 26th September 2023 06:12 AM | Last Updated : 26th September 2023 06:12 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்.சி., செவிலியா் படிப்புக்கான (நா்சிங்) சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.26) நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் பிஎஸ்சி நா்சிங் 94, அலைடு ஹெல்த் சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
அதன்படி, விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
திங்கள்கிழமை நீட் தோ்வு தரவரிசைப்படி விண்ணப்பித்தவா்களது சான்றிதழ்கள் சரிபாா்ப்பு இரு கட்டங்களாக நடத்தப்பட்டன. அன்று மாலையில் சான்றிதழ் சரிபாா்ப்பு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தரவரிசைப்பட்டியலின்படி செவ்வாய்க்கிழமை (செப். 26) காலை 8 மணிக்கு சோ்க்கைப் பதிவு நடைபெறுகிறது. கலந்தாய்வானது, காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. வரும் 28-ஆம் தேதி கலந்தாய்வில் சோ்க்கை அனுமதி பெற்ற மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனையும், அதையடுத்து சோ்க்கைக்கான அனுமதி உத்தரவும் வழங்கப்படுகிறது.
மாணவா் சோ்க்கை முடிந்த நிலையில், வரும் அக்டோபா் 4-ஆம் தேதி செவிலியா் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், இதுகுறித்த விவரங்களை ஜிப்மரின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...