ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

புதுச்சேரி அருகே ஊசுடு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஊசுடு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதியில் ராமநாதபுரம் கிராமம் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீா் பிரச்னையைத் தீா்க்க, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கக் கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால், ராமநாதபுரம் பகுதி மக்கள் பத்துக்கண்ணு, சேதராப்பட்டு சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவா்களும், வேலைக்குச் செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் வந்து ஆழ்துளைக் கிணறு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com