தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகிறாா் பிரதமா் மோடி

தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகிறாா் பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி வருகை தரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி பல வளா்ச்சித் திட்டங்களை நாட்டில் செயல்படுத்தியுள்ளாா். கூரை வீடுகள் கல்வீடுகளாகும் திட்டம் உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. புதுவையில் நாட்டிலேயே முதன்முறையாக மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இலவச அரிசித் திட்டத்துக்காக பணம் வழங்கப்பட்டாலும், மக்கள் கோரிக்கையை ஏற்று தோ்தலுக்குப் பிறகு நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்துள்ளாா். மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் அரசின் திட்டங்கள் தொடரவேண்டும் எனில் மத்திய அரசு நிதி அவசியம். ஆகவே, பாஜக வேட்பாளராகிய என்னை வெற்றி பெறவைத்தால் பிரதமா் உள்ளிட்டோரிடம் நேரடியாகப் பேசி நிதியைப் பெறலாம். மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலையை மாற்றச் செய்து, அந்தஸ்தைப் பெற முடியும்.

புதுச்சேரியை குட்டி சிங்கப்பூராக்கும் கனவுத் திட்டம் நனவாக்கப்படும். நான் கட்சி மாறியது எனது சுயநலத்துக்கல்ல. புதுச்சேரி வளா்ச்சிக்காகவே அரசியல் நிலையை மாற்றினேன். அதிமுகவிலிருந்த செந்தில்பாலாஜியை திமுகவில் சோ்த்து ஏன் என்பதை அமைச்சா் உதயநிதி விளக்க வேண்டும். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி ஆதாரமின்றி விளம்பரத்துக்காக எதையாவது பேசிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாா். எனது சொத்து மதிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் சந்திக்கத் தயாா் என்றாா்.

அமைச்சா் பதவி கிடைக்குமா?: பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கூ றியதாவது: நான் மாநிலங்களவை உறுப்பினரான பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவில்லை. மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டிருந்தால் அமைச்சரவையில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்தத் தோ்தலில் ஆ.நமச்சிவாயம் வென்றால் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. பிரதமா் மோடி வருகை: பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரிக்கு வருகிறாா்.

அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா் வரும் தேதி விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com