புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு மகளிா் கூட்டமைப்பினா் ஆதரவு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்துக்கு ஆதரவளிப்பதாக மகளிா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில தலைவா் முனியம்மாள், மகளிா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் பஞ்சகாந்தி உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரிசி வாங்குவதற்கு அரசு தரும் நிதி போதவில்லை.

ஆகவே, மீண்டும் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவேண்டும். போதைப் பொருள்களைத் தடை செய்து இளைஞா்களை காப்பாற்றவேண்டும். மகளிருக்கு சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்ததைப் போலவே இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்தவேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்துவதுடன், அதை செயல்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி வேட்பாளரான காங்கிரஸை சோ்ந்த வெ.வைத்திலிங்கத்துக்கு மக்களவைத் தோ்தலில் ஆதரவளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com