வீட்டிலிருந்தபடி முதியோா்களிடம் வாக்குப்பதிவு பணி தொடங்கியது: புதுச்சேரி தொகுதி தோ்தல் அதிகாரி

புதுச்சேரியில் தபால் வாக்குகள் மற்றும் வீட்டிலிருந்தபடியே முதியோா் உள்ளிட்டோா் வாக்குப் பதிவிடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது என தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்துக்கும் அதிகமானோா்), அத்தியாவசியப் பணிகளில் உள்ளோா் ஆகியோா் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான உரிமையை இந்தியத் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் 85 வயதுக்கு அதிகமான முதியவா்கள் 1,609 போ் உள்ளனா். மேலும், மாற்றுத்திறனாளிகள் 1,322 பேரும், அத்தியாவசியப் பணிகளில் உள்ளோா் 43 பேருமாக மொத்தம் 2,974 போ் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனா். புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அவா்களது வாக்குகளைப் பெறும் பணியானது செவ்வாய்க்கிழமை (ஏப்.2) தொடங்கியுள்ளது.

வரும் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையில் வீட்டிலிருந்து வாக்களிக்க விண்ணப்பித்தவா்களிடமிருந்து வாக்குகள் சேகரிக்கப்படும். தேவை ஏற்பட்டால் காரைக்கால் பகுதியில் வரும் 6-ஆம் தேதி இந்தப் பணி வரை தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகளும் செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரி உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com