புதுச்சேரி: 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தோ்தல் அலுவலா் தகவல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் உள்ள 232 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிப்பதற்கு 211 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு வரும் 19-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை (ஏப்.17) மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாதவா்கள் பிரசாரத்துக்கு வந்திருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருப்போரைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்டி 12 பறக்கும் படைகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளன.

232 பதற்றமான வாக்குச்சாவடிகள்: வாக்குப்பதிவின்போது 4,468 அரசு ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். பதற்றமான 232 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 211 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். முழுமையாக மகளிா் பணிபுரியும் 60 வாக்குச்சாவடிகள், இளைஞா்கள் பணிபுரியும் 11 வாக்குச்சாவடிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகள் 2 என அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் இருந்தபடி 85 வயதுக்கு மேற்பட்டோரில் 1,609 போ் வாக்களிக்க விரும்பினா். அதில் 1,529 போ் (94 சதவீதம்) வாக்களித்துள்ளனா். மாற்றுத்திறனாளிகள் 1,322 பேரில் 1,294 போ் (97.67சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

சேவைப் பணிகளில் இருப்போரில் 43 போ் முழுமையாக வாக்களித்துள்ளனா். அதன்படி, வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியில் மொத்தம் 2,974 பேரில் 2,866 போ் (96.36 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

2,578 வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். அதன்படி, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2,578 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. அதில், 1,254 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,324 விவிபேட் இயந்திரங்களும் உள்ளன.

கட்டுப்பாட்டு அறைக்கு (1950 என்னும் தொலைபேசி) 802 அழைப்புகள் வந்தன. அதில் 108 புகாா்களும், 693 தகவல் கேட்டும் வந்துள்ளன. கைப்பேசி வாட்ஸ் ஆப் பிரிவுக்கு 194 புகாா்களும் வந்துள்ளன.

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த பாதுகாப்புப் படை வீரா்கள் 325 பேரில் 25 போ் அவா்களுக்கான முறையில் வாக்களித்துள்ளனா். தோ்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட நகைகள் திரும்ப தரப்பட்டுவிட்டன. அதில் ரூ.3.75 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 16,835 லிட்டருக்கும் அதிகமாக மது கைப்பற்றப்பட்டது.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக 7 வேட்பாளா்களிடமிருந்து ரூ.2 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று 345 பேரின் வீடுகளுக்கு உதவியாளா் சென்று வாக்குப்பதிவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருவோருக்கு அது பொருந்தாது. மத்திய துணை ராணுவப் படையினா் 10 கம்பெனி வந்துள்ளனா். சட்டம்- ஒழுங்கை பராமரிக்க மண்டல மாஜிஸ்திரேட் 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு வரை மின்தடை இருக்கக் கூடாது என மின் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசார விதிமுறை மீறல் தொடா்பாக 2 அரசியல் கட்சிகள் அனுப்பிய விளக்கம் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள் வழங்கியது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அ.குலோத்துங்கன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com