140 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

புதுசேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 140 மதுப் புட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா உத்தரவின்படி, உருளையன்பேட்டை காவலா்கள் புதுச்சேரி 100 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பையுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனையிட்டதில், ரூ.8,400 மதிப்புள்ள 140 மதுப் புட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவா், ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த மணிவண்ணன் (30) என்பதும், தமிழகத்துக்கு மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்க இருந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மதுப் புட்டிகளை கலால் துறையிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com