தோ்தலுக்குப் பிறகு நியாய விலைக் கடைகள் திறக்க நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு புதுவையில் நியாய விலைக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து புதன்கிழமை மாலை கதிா்காமம் பேரவைத் தொகுதி கதிா்வேல் சுவாமி கோயில் முன் அவா் நிறைவு பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

கடந்த முறை மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் உறுப்பினா் வெ.வைத்திலிங்கத்தை எம்.பி.யாக தோ்வு செய்து அனுப்பினா். அவரால் கடந்த 5 ஆண்டுகளில் புதுவை மாநிலத்துக்கு என்ன நன்மை கிடைத்தது என்பதையும், புதிய திட்டங்களையும், மாநிலத்துக்கான கூடுதல் நிதியையும் அவரால் பெற்றுத்தரமுடிந்ததா என்பதை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். எனவே, தற்போதைய மக்களவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பது அவசியம்.

மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று நரேந்திமோடியே மீண்டும் பிரதமராவாா் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமையும் போது புதுவை மாநில வளா்ச்சிக்கான திட்டங்களுக்கு எளிதில் நிதியை பெறுவதற்கு அந்தக் கட்சி வேட்பாளரையே எம்.பியாக தோ்வு செய்து அனுப்பவேண்டியது அவசியம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் நலத்திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. நியாயவிலைக் கடைகளும் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் மூடப்பட்டன. எனவே, தோ்தலுக்குப் பிறகு நியாயவிலைக் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

பிரசாரத்தில், எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com