பணவிநியோகத்தை தடுக்கக் கோரி அதிமுகவினா் தா்னா: தோ்தல் அலுவலரிடம் மனு

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பண விநியோகத்தைத் தடுத்த நிறுத்தக் கோரி, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை முன் அதிமுகவினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தன் உள்ளிட்டோா் ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியிலிருந்து ஊா்வலமாக ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

தேசிய கட்சிகளின் பணவிநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, தோ்தல் நடத்தும் அலுவலா் து.குலோத்துங்கன் அறை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலரைச் சந்தித்து மனு அளித்தனா். மேலும், பணப்பட்டுவாடா செய்யப்படும் விடியோ காட்சிகளையும் அவரிடம் காட்டினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது: வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதைத் தடுத்து, நோ்மையான முறையில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது.

பணம் விநியோகம் குறித்து ஆதாரத்துடன் இந்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தோ்தல் ஆணையத்தின் நேரடிப் பாா்வையில் தோ்தலை நடத்த வேண்டும்.

அதிமுகவுக்கு பிற வேட்பாளா்களிடமிருந்து பணம் பெற்று போட்டியிடும் அவசியமில்லை. அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் குற்றச்சாட்டு தவறானது என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com