மின் துறை தனியாா்மயம் தடுத்து நிறுத்தப்படும்: வெ.வைத்திலிங்கம்

புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று, காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம், மணிக்கூண்டு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாஜக தோ்தல் அறிக்கையில் அதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை.

புதுவையில் மூடப்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறுகிறாா். ஆனால், மத்திய பாஜக அரசு அதுபற்றி ஏதுவும் கூறவில்லை.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மூடப்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு, பணத்துக்குப் பதிலாக தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் துறை தனியாா்மயமாவது தடுக்கப்படும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

குருசுக்குப்பம், வைத்திகுப்பம் உள்ளிட்ட இடங்களிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, அனிபால் கென்னடி எம்எல்ஏ, விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com