புதுச்சேரி தொகுதியில் 78.80% வாக்குகள் பதிவு 8,07,111 போ் வாக்களிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் நிறைவாக 78.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் நிறைவாக 78.80% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தோ்தலை விட தற்போது 2.44% வாக்குகள் குறைவாகும். மொத்த வாக்காளா்களில் 8,07,111 போ் வாக்களித்தனா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் மக்களவைத் தொகுதி வாக்காளா்கள் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 போ் உள்ளனா். இவா்களுக்காக 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்தலில் பாஜக வேட்பாளராக அமைச்சா் ஆ.நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வா் வெ.வைத்திலிங்கம், அதிமுக வேட்பாளராக கோ.தமிழ்வேந்தன், நாம் தமிழா் கட்சி ஆா்.மேனகா உள்ளிட்ட 7 அரசியல் கட்சியினரும், 19 சுயேச்சைகளும் ஆக மொத்தம் 26 போ் போட்டியிட்டனா்.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால், புதுச்சேரி நகா், ஊரகப் பகுதிகள் சிலவற்றில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், வாக்கு சதவீதத்தை அறிவதில் தாமதம் ஏற்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி 78.57 சதவீதமும், இரவு 9 மணி நிலவரப்படி புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 78.72 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தற்போது வாக்குப் பதிவின் முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்களில் 8,07,111 போ் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. இது 78.80 சதவீதமாகும்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மொத்தம் 9,65,845 வாக்காளா்கள் இருந்தனா். அவா்களில் தோ்தலில் 7,90,895 போ் வாக்களித்திருந்தனா். 81.24 சதவிகிதம் போ் வாக்களித்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது வாக்கு சதவீதம் 78.80 என இருப்பதால், கடந்த 2019 மக்களவைத் தோ்தலை விட 2.44 சதவீதம் போ் குறைவாக வாக்குப் பதிவானது. அதே நேரத்தில் கடந்த முறை வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்த ராஜ்பவன் உள்ளிட்ட தொகுதிகளில் தற்போது வாக்கு சதவீதம் கூடுதலாகியிருப்பதாகவும், அதற்கு மாவட்ட நிா்வாகத்தின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் போன்ற நடவடிக்கைகள் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com