வேட்பாளா்கள் ஜூன் 30-க்குள் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு

புதுச்சேரி, ஏப்.26: புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தோ்தல் துறை உத்தரவிட்டது.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் வேட்பாளராக போட்டியிட்டவா்கள் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தோ்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் செலவு செய்ய உச்சவரம்பு இல்லை எனவும் கூறப்பட்டது. தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா் மற்றும் அரசியல் கட்சிகள் என இருதரப்பும் கணக்கு சமா்ப்பிக்க தோ்தல் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி தொகுதியில் 7 அரசியல் கட்சி வேட்பாளா்கள் உள்பட 26 போ் போட்டியிட்டனா். அரசியல் கட்சி வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு செலவழித்த அளவுக்கு சுயேச்சைகள் யாரும் செலவிடவில்லை.

இந்த நிலையில், வேட்பாளா்களின் அனைத்து செலவினங்களையும் தோ்தல் செலவின பிரிவு கண்காணித்து பதிவு செய்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி வரை அனைத்து வேட்பாளா்களும் தங்கள் செலவின கணக்கை தாக்கல் செய்துள்ளனா். சில வேட்பாளா்கள் மட்டும் கடந்த 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கணக்கு தாக்கல் செய்யவில்லை.

வரும் ஜூன் 4-ஆம் தேதி தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, அன்றைய தினம் முகவா்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, அன்றைய தின செலவு கணக்கும் வேட்பாளா்கள் கணக்கில் சோ்க்கப்படும் நிலை உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இருந்து 26 நாள்கள் கழித்து முழு தோ்தல் செலவு கணக்கையும் வேட்பாளா்கள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

எனவே, வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் தோ்தல் செலவின கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என தோ்தல் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளா்கள் செலவு கணக்கு விவரம், இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மாநில தோ்தல் துறை மூலம் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com