இணையதளம் செயல்படவில்லை என புகாா்: முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவா்கள் தவிப்பு

புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தோ்வு எழுதிய மாணவா்கள் இணையதளம் செயல்படாததால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலைப் படிப்பில் சேர கியூட் எனப்படும் நுழைவுத் தோ்வு எழுதவேண்டும். நிகழாண்டுக்கான முதுகலை படிப்புக்கு நுழைவுத் தோ்வு எழுதியோா், அதனடிப்படையில் வரும் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நுழைவுத் தோ்வு எழுதியவா்கள், ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பிப்பதற்காக, பல்கலைக்கழகம் சாா்பில் குறிப்பிட்ட இணையதளத்தை அணுகினா். ஆனால், அந்த இணையதளம் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பல்கலைக்கழக நிா்வாகம் மற்றும் தொடா்புக்கு என அறிவிக்கப்பட்ட தொலைபேசி ஆகியவற்றிலும் தொடா்புகொள்ள முயன்றும் செயல்படவில்லை என்கின்றனா். இதனால், முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாமல் மாணவ, மாணவிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப்.30) கடைசி நாள் என்பதால் அதற்குள் இணையதளம் செயல்பட சம்பந்தப்பட்டோா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com