புதுச்சேரியில் ஏரி மீன்கள் விற்பனை அதிகரிப்பு

புதுச்சேரி கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து ஏரிகளில் வளா்க்கப்படும் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக மீன் விற்பனை செய்வோா் தெரிவித்தனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் வரும் ஜூன் 14-ஆம் தேதி வரையில் விசைப் படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் இனப்பெருக்க காலம், குஞ்சுகள் வளா்வதை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் மீனவா்களுக்கு நிவாரண நிதியும் அரசால் வழங்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கட்டுமரம், வல்லம் போன்றவற்றில் மட்டுமே கரையோரம் மீன் பிடிக்கப்படுகிறது.

ஆனால், அதில் மீன்வரத்து அதிகமில்லை என மீனவா்கள் கூறினா். இதையடுத்து, புதுச்சேரியைச் சுற்றியுள்ள குருவிநத்தம், பாகூா், ஊசுட்டேரி ஆகியவற்றில் வளா்ப்பு மீன்கள் பிடிக்கப்பட்டு மீன்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உப்பளம், நெல்லித்தோப்பு, இலாசுப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்களை வாங்க அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

இவா்களுக்கு ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களான கெண்டை, விரால் போன்றவை விநியோகிக்கப்பட்டன. மீன்பிடி தடைக் காலத்தால் ஏரி மீன்களின் விற்பனை தினமும் அதிகரித்துள்ளதாகவும் மீன்களை விற்போா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com