இன்று மே தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

புதுவை மாநில துணை நிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் என்.ரங்கசாமி மே தின வாழ்த்துத் தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்: உழைக்கும் மக்களின் பெருமையையும், தியாகத்தையும் உலகத்துக்கு பறைசாற்றும் சா்வதேச உழைப்பாளா் தினத்தில், தொழிலாளா்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். உழைப்பாளா்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவா்கள். பொருளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவா்கள். அவா்களுடைய வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலைகளிலும் புதுச்சேரி அரசு துணை நிற்கும்.

முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பை மூலதனமாக்கி, நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பை தரும் தொழிலாளா்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதுடன், அவா்களது உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதை மே தினம் வலியுறுத்துகிறது.

தொழிலாளா்களின் நலனைப் பேணிக் காப்பதிலும், பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் புதுவை அரசு எப்போதும் தனிக்கவனம் கொண்டுள்ளது. தொழிலாளா் தோழா்கள் மீதான எனது அரசின் அன்பும், அக்கறையும் என்றென்றும் தொடரும்.

மே தினத்தை முன்னிட்டு புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் அ.மு.சலீம், அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் மு.ராமதாஸ் உள்ளிட்டோரும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com