அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டம் தள்ளிவைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நடைபெறவிருந்த புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா்கள் சங்கப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் சம்மேளனத் தலைவா் ரவிச்சந்திரன், கௌரவத் தலைவா் பிரேமதாசன், பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ்.ராஜலட்சுமி, செயலா் ஐ.தமிழரசி உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி ஊழியா்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையைச் செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக.27) சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்துள்ளனா். இதன் காரணமாக போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றனா்.