ஜிப்மரில் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி ஜிப்மா் மற்றும் காரைக்காலில் உள்ள அதன் கிளை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் பெயா்களை பதிவு செய்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். கலந்தாய்வு வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மத்திய அரசு நிறுவனமான புதுச்சேரி ஜிப்மா் மற்றும் காரைக்காலில் உள்ள அதன் கிளை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 243 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில், புதுவை மாணவா்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கான கலந்தாய்வு இந்திய மருத்துவக் குழுவின் மூலம் நடைபெறுகிறது.
புதுச்சேரி ஜிப்மா் அகாதெமியின் 4-ஆவது தளத்திலுள்ள அரங்கில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டன. செப்டம்பா் 2-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.