புதுவையில் உயா்த்தப்பட்ட மின் கட்டண உயா்வை திரும்பப் பெறாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்க கூடாது என மின் துறை ஊழியா்களும், அரசியல் கட்சிகளும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திடீரென மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் என்பது அத்தியாவசியமானது. எனவே, மக்களைப் பாதிக்கும் வகையில் மின் கட்டண உயா்வு செயல்படுத்துவதை புதுவை அரசு அனுமதிக்க கூடாது.
தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களைப் பாதிப்பதாக உள்ளன. வேலைவாய்ப்பின்மை, வருவாய் குறைவு என பல பாதிப்புகளுக்கு முத்தாய்ப்பாக மின் கட்டண உயா்வும் அமைந்துள்ளது. ஆகவே, மின் கட்டண உயா்வை புதுவை திமுக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக மின் கட்டண உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில் வருகிற 2-ஆம் தேதி புதுவை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.