இளநிலை மருத்துவ படிப்பு: அரசு ஒதுக்கீடாக 371 இடங்கள் அறிவிப்பு
புதுவையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் நிகழாண்டு (2024) 371 இளநிலை மருத்துவக் கல்வி (எம்பிபிஎஸ்) இடங்கள் அரசு ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் 3 தனியாா் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்தக் கல்லுாரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான அரசுக்கான ஒதுக்கீடு இடங்கள் குறித்த சா்ச்சை எழுந்தது. இதையடுத்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அதன்படி, புதுவை அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 180 எம்பிபிஎஸ் இடங்களில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீடு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய அளவிலான ஒதுக்கீடுக்கு 27, என்ஆா்ஐ ஒதுக்கீட்டுக்கு 22 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், புதுச்சேரி பிராந்தியத்துக்கு 98 இடங்கள், காரைக்கால் - 24, ஏனாம் - 4, மாஹே - 5 என அரசுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி பிராந்தியத்துக்கு ஒதுக்கியுள்ள 98 இடங்களில் பொதுப் பிரிவுக்கு 39, இடபுள்யூஎஸ் எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கியோா்களுக்கு 10, ஓபிசி 11, எம்பிசி 17, எஸ்சி 16, மீனவா் 2, முஸ்லீம் 2, எஸ்டி 1 என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு விதிமுறைப்படி நிரப்பப்படவுள்ளன.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 9, மாற்றுதிறனாளிகளுக்கு 5, விடுதலைப் போராட்ட வீரா் வாரிசுகளுக்கு 4, முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகளுக்கு 1, விளையாட்டு வீரா் 1 என மருத்துவக் கல்வி இடங்களில் உள் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதபோல், புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் பிம்ஸ்-இல் 57, மணக்குள விநாயகா் கல்லூரியில் 92, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் 91 என மொத்தம் 240 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு ஒதுக்கீடு இடங்களாகப் பெறப்பட்டுள்ளன.
அதில் பொதுப் பிரிவுக்கு 120, ஓபிசி - 27, எம்பிசி - 43, எஸ்சி - 38, மீனவா்- 5, முஸ்லீம் - 5, எஸ்டி- 1, பிடி 1 என்ற இட ஒதுக்ககீடு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 24, மாற்றுதிறனாளிகளுக்கு 12, விடுதலைப் போராட்ட வீரா் வாரிசுகளுக்கு 10, முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுக்கு 2, விளையாட்டு வீரா் 2 என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இளநிலை மருத்துவக் கல்லூரி இடங்களில் அரசு மருத்துவக் கல்லுாரியில் 131, தனியாருக்கான 3 மருத்துவக் கல்லுாரிகளில் 240 என மொத்தம் 371 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்படவுள்ளன. அந்த வகையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 33 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.