புதுச்சேரி
பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
புதுச்சேரி மதகடிப்பட்டிலுள்ள, ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் எஸ்எம்வி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான தனசேகரன், பொருளாளா் ராஜராஜன், மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். எஸ்எம்வி பள்ளி முதல்வா் த.அனிதா வரவேற்றாா்.
மாணவா்கள் கிருஷ்ணா், இராதையைப் போல ஆடை அலங்கார ஒப்பனைகளோடு அணிவகுத்து, புல்லாங்குழல் இசைத்தனா். இதையடுத்து இராதை, கிருஷ்ணா நடனமும், கோலாட்டமும் நடைபெற்றது. மாணவா்கள் கிருஷ்ணரின் பிறப்பையும், அவரின் சிறப்பையும் பாடல்களாகப் பாடினா். பின்னா், சிறப்பு உணவு படையல் வழிபாடு நடைபெற்றது.