புதுச்சேரியில் இன்று உணவுத் திருவிழா தொடக்கம்

Published on

புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளின் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது. இதனை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைக்கிறாா்.

இதுகுறித்து, புதுவை மாநில உள்ளாட்சித் துறை திட்ட இயக்குநா் எஸ்.சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளின் உணவுத் திருவிழா மற்றும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஆக.30) தொடங்கி செப்டம்பா் 1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடற்கரை சாலை காந்தி திடலில் மத்திய அரசு திட்டத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி சாலையோர வியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமையவுள்ளது. கண்காட்சி அடிப்படையில் தேசிய மற்றும் மாநில அளவில் இரு நிலைகளில் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கடந்த ஜூலையில் நடைபெற்ற தேசிய அளவிலான விருது நிகழ்ச்சியில் புதுவை மாநில உள்ளாட்சித் துறை இயக்குநா் இரண்டாவது பரிசுக்கான விருதுகளைப் பெற்றுள்ளாா். இந்த நிலையில் மாநில அளவிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் விருது வழங்கும் விழா நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியை புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைக்கிறாா். முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலை வகிக்கிறாா். இதில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com