உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்

தமிழகத்தில் 42% பெண்கள் பணிக்குச் செல்கின்றனா்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 42 சதவீத பெண்கள் பணிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா்
Published on

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 42 சதவீத பெண்கள் பணிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா் என்று, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழா புதுச்சேரி அருகே தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனா். திராவிட இயக்க ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள்தான் பெண்களின் முன்னேற்றத்துக்கு காரணமாகும். தமிழகத்தில் மகளிருக்கான சொத்துரிமை சட்டம் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் செயல்படுத்தப்பட்டது.

தற்போது இலவசப் பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல மகளிா் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் இதுவரை 520 கோடி பயண நடைகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்துள்ளனா்.

புதுமைப் பெண் திட்டத்தால் தமிழகத்தில் உயா் கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 1.60 கோடிப் போ் பயனடைந்து வருகின்றனா்.

தமிழகத்தில் மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்பெற்றுள்ளனா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் 42 சதவீத பெண்கள் பணிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனா். திமுக அரசின் நலத் திட்டங்களால்தான் மகளிா் மேம்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, விசிக தலைவா் தொல் திருமாவளவன், அமைச்சா்கள் க.பொன்முடி, எம். ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வி.கணேசன், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com