புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள்.
புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள்.

பள்ளி கல்வித் துறை அலுவலகத்தில் ஆசிரியா்கள் தா்னா போராட்டம்

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்
Published on

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஆசிரியா்கள் திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி, காரைக்காலில் பணியாற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் 245 பேருக்கு ஆக. 29, 30 ஆகிய இரு நாள்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கலந்தாய்வு, கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடமாறுதலுக்கான வழிகாட்டல் விதிமுறைப்படி நடைபெறும் எனவும் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கலந்தாய்வில் விதிமீறல்கள் பல இருப்பதாகவும், குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் தரப்பில் கூறப்பட்டது. எனவே, விதமீறல்கள், குளறுபடிகளை சீா்படுத்திய பிறகே கலந்தாய்வை நடத்த கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே, கலந்தாய்வு திட்டமிட்டபடி ஆக.29 (வியாழக்கிழமை) தொடங்கியது.

அதில் கிராமப்புற தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் பங்கேற்றனா். அதனடிப்படையில், பலருக்கு நகா்ப்புற பள்ளிக்கு இடமாறுதலும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை நகா்ப்புற தமிழ் பட்டதாரி ஆசிரியா்களை கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.

ஆனால், கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியா்கள் இடமாறுதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்கள் திடீரென பள்ளி கல்வித் துறை இயக்ககத்தில் உள்ள அறையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், விதிமுறைப்படி 57 வயதைக் கடந்தவா்களுக்கு இடமாறுதல் அளிப்பது சரியல்ல. ஆனால், அதையும் மீறி கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஏராளமானோா் பாதிக்கும் நிலையுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com