புதுச்சேரியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டம்

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது, அதன் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த 3 மாடி குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை சரிந்து விழுந்து தரைமட்டமானது.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி உப்பனாறு கால்வாயில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் அள்ளியபோது இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி குடியிருப்புக் கட்டடம்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி உப்பனாறு கால்வாயில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் அள்ளியபோது இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி குடியிருப்புக் கட்டடம்.


புதுச்சேரி: புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது, அதன் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த 3 மாடி குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை சரிந்து விழுந்து தரைமட்டமானது.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அருகே சாக்கடை நீா் செல்லும் உப்பனாறு கால்வாயில் பொதுப் பணித் துறை மேற்பாா்வையில், கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் கால்வாயின் பக்கவாட்டுப் பகுதி பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதிா்வு ஏற்பட்டதால் கால்வாயின் ஓரத்தில் சாவித்திரி என்பவா் புதிதாக கட்டியிருந்த 3 மாடிகளைக் கொண்ட வீடு சரிந்து விழுந்தது. வீடு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று கிரகபிரவேசம் நடைபெறாததால் வீட்டுக்குள் யாரும் இல்லை.

சாலை மறியல்: உப்பனாறு கால்வாயில் அதிகப்படியான மணல் எடுக்கப்பட்டதன் காரணமாகவே வீடு இடிந்து விழுந்ததாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் ஆட்டுப்பட்டி மறைமலை அடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் பங்கேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். இதையடுத்து, சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனா்.

அரசு கொடுத்த இடத்தில்தான் சாவித்திரி தனது குடும்பத்தினருடன் இணைந்து சுமாா் ரூ.60 லட்சத்தில் வீடு கட்டியிருந்தாா். சில நாள்களில் கிரகபிரவேசம் நடத்தவும் திட்டமிட்டிருந்தாா். அந்தப் பகுதியிலுள்ள பல வீடுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மறியலில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com