குடியரசு தின தேநீா் விருந்தை அரசியலாக்க வேண்டாம் -புதுவை ஆளுநா்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். இதை அரசியலாகப் பாா்க்கக் கூடாது என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்
குடியரசு தின தேநீா் விருந்தை அரசியலாக்க வேண்டாம் -புதுவை ஆளுநா்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். இதை அரசியலாகப் பாா்க்கக் கூடாது என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

புதுவை ஆளுநா் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதய நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

புதுவையில் அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறேன். தமிழகத்தில் ‘மக்களுடன் முதல்வருடன்’ திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல, புதுவையில் மத்திய அரசின் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுவை திமுகவினா் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசின் எந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என திமுகவினா் கூறவேண்டும். பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது. குடியரசு தினத்தையொட்டி, ஆளுநரின் தேநீா் விருந்தை திமுகவினா் அரசியலாக்குவது சரியல்ல என்றாா் அவா்.

திமுக, காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு:

புதுவை துணைநிலை ஆளுநரின் குடியரசு தின தேநீா் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுக, காங்கிரஸ் தெரிவித்தன.

புதுவை மாநில திமுக அமைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கையில், புதுவை ஆளுநா் மாளிகை பாஜக கொடி கட்டாத அலுவலகமாக, துணைநிலை ஆளுநா் பாஜக தலைவா் போல செயல்படுவது சரியல்ல. எனவே, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் நடத்தவுள்ள குடியரசு தின விழா தேநீா் விருந்து அழைப்பை புதுவை திமுக புறக்கணிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸும் புறக்கணிப்பு: சட்டப்பேரவைக் குழு காங்கிரஸ் தலைவா் மு.வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறும்போது, சட்டப்பேரவை உறுப்பினா்களின் உரிமைகள் பாதிக்கும் வகையில் அரசியல் ரீதியாக துணைநிலை ஆளுநா் செயல்படுகிறாா். எனவே, தேநீா் விருந்து நிகழ்ச்சியை புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com