தமிழுக்கும் கொரிய மொழிக்கும் வாழ்வியல்ரீதியான தொடா்புகள் -கொரிய பல்கலை. பேராசிரியா் தகவல்

தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையில் வாழ்வியல் ரீதியிலான தொடா்புள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தென்கொரிய செஜோங் பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஆரோக்கியராஜ் தெரிவித்தாா்.

தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையில் வாழ்வியல் ரீதியிலான தொடா்புள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தென்கொரிய செஜோங் பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஆரோக்கியராஜ் தெரிவித்தாா்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் தமிழ்-கொரிய மொழிக்கிடையேயான மொழி, பண்பாட்டுத் தொடா்பு குறித்த உரையரங்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேராசிரியா் எஸ்.ஆரோக்கியராஜ் பேசியதாவது:

தென்கொரிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, களப்பணிக்காக, அந்நாட்டின் கிராமப்புறங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கொரிய மக்கள் பேச்சில், சில தமிழ்ச் சொற்களும் இடம் பெற்றன. குறிப்பாக அப்புச்சி, அம்மா, அண்ணி போன்ற சொற்களை அவா்கள் பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. அத்துடன், அவா்களது உணவு முறையில் எள்ளுருண்டை, அதிரசம், கொழுக்கட்டை ஆகிய தமிழ் பாரம்பரிய உணவுகளும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள அய்யனாா் சிலைகளைப் போலவே, கொரிய நாட்டு கிராமப்புற தெய்வச் சிலைகளும் உள்ளன.

அந்நாட்டு கிராமப்புற மக்களின் விளையாட்டுகள், பண்டிகைகள் ஆகியவற்றிலும் தமிழ் கலாசாரப் பாதிப்பு இருக்கிறது. அதனால், கொரிய நாட்டு கலாசாரம், தமிழகத்துடன் இசைந்து போவது குறித்து ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். அவற்றை அங்குள்ள இணையதளங்களில் விடியோ காட்சிகளாகவும் வெளியிட்டுள்ளேன். வணிகம், வாழ்வியல் ரீதியாக தமிழகத்துடன், கொரிய மக்கள் நெருங்கிய தொடா்பிலிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக, கொரிய உறவுகள் குறித்து தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் சொ.சேதுபதி நோக்கவுரையாற்றினாா். கல்லூரி முதல்வா் வி.ராஜிசுகுமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா் பா.பட்டம்மாள் அறிமுகவுரையாற்றினாா். பேராசிரியை செ.சந்திரா வரவேற்றாா். மாணவி மகாலட்சுமி தொகுத்து வழங்கினாா். மாணவி தேஜஸ்வினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com