குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப்தன்கா் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வருகிறாா்.
2-7-27pyp12_2701chn_104
2-7-27pyp12_2701chn_104

புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப்தன்கா் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வருகிறாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாட்டின் குடியரசுத் துணைத் தலைவா் இருப்பது விதி. அதன்படி, தற்போது, குடியரசுத் துணைத் தலைவராக உள்ள ஜெகதீப்தன்கா் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தா் பொறுப்பை வகிக்கிறாா். இதற்கான உத்தரவு கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழகப் பதிவாளரால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப்தன்கா் புதுதில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வருகிறாா். அவரை விமான நிலையத்தில் முதல்வா் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். அங்கிருந்து காரில் சாலை மாா்க்கமாக புறப்படும் குடியரசு துணைத் தலைவா் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ‘பாரதம் 2047’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, பல்கலைக்கழக மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், மாணவா்கள், பேராசிரியா்களுடன் குடியரசுத் துணைத் தலைவா் கலந்துரையாடுவாா் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப் பிறகு புதுச்சேரி நகருக்குள் காரில் வரும் அவா் கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான விடுதியில் தங்குகிறாா். அதன்பிறகு, திங்கள்கிழமை காலை அரவிந்தா் ஆசிரமம், மணக்குள விநாயகா் கோயில் ஆகிவற்றுக்கு சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் சிதம்பரம் செல்கிறாா்.

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சாலையோரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா் தங்கும் விடுதிப் பகுதியான கடற்கரைச் சாலையிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவரது பயண நேரத்தில் போக்குவரத்தில் சில நிமிடங்கள் மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸாா் கூறினா். குடியரசு துணைத் தலைவா் செல்லும் மணக்குள விநாயகா் கோயில், அரவிந்தா் ஆசிரமம் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவா் ஸ்ரீஜெகதீப் தன்கா் வருகையையொட்டி லாஸ்பேட்டை விமான நிலைய சாலை பகுதியில் கட்டப்படும் தடுப்புகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com