காங்கிரஸ் கட்சிக்கு புதுவை மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனா்: வெ.வைத்திலிங்கம் எம்.பி

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுதந்திர பொன்விழா நகரில், சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், வெ.வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ளது. இதில், புதுச்சேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். திமுக தலைமையும், புதுச்சேரி தொகுதியை கேட்பது அவா்களது உரிமை. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெறும் என்றாா்கள். ஆனால், தற்போது ஒரு என்ஜின் ஆட்சி கூட நடைபெறவில்லை. 2 என்ஜின்களும் வெவ்வேறு திசையில் செல்கிறது. இதனால், மாநிலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனா். யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே தீா்மானிப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com