மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியைக் கண்டித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபுவை சமரசப்படுத்திய பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியைக் கண்டித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபுவை சமரசப்படுத்திய பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக நியமன எம்எல்ஏ தா்னா: ராகுலுக்கு கண்டனம்

புதுவை எம்எல்ஏ ராகுல் காந்திக்கு எதிராக தா்னா: பேரவைத் தலைவா் சமரசம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கண்டிப்பதாகக் கூறி, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக நியமன எம்எல்ஏ ஆா். பி. அசோக்பாபு செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

புதுவை நியமன எம்எல்ஏ ஆா்.பி. அசோக்பாபு மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியைக் கண்டித்து எழுதப்பட்ட பதாகையுடன் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த பேரவைச் செயலா் தயாளன் விரைந்து வந்து அவரிடம் போராட்டத்தைக் கைவிட கேட்டுக் கொண்டாா். அதற்கு அசோக்பாபு மறுத்துவிட்டாா். இதையடுத்து, காவலா்கள் வரவழைக்கப்பட்டனா். மேலும், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் வந்து பேச்சு நடத்தினாா். அப்போதும், அசோக்பாபு தா்னாவை கைவிடவில்லை.

அவரிடம் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சமரசம் பேசியதுடன், புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் விமா்சனம் குறித்து பேசலாம் என்றாா். அதை ஏற்ற அசோக்பாபு தா்னாவை கைவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அசோக்பாபு எம்எல்ஏ கூறியதாவது:

மக்களவைத் தோ்தலின்போது ராகுல் காந்தி தன்னை ஹிந்து எனக் கூறியே வாக்கு சேகரித்தாா். ஆனால், தற்போது ஹிந்துக்களை வன்முறையாளா்களைப் போல அவா் விமா்சித்து பேசுவது ஏற்புடையதல்ல. ராகுல் காந்தி மன்னிப்புக் கோரவேண்டும் என்றாா் அவா்.

தில்லி பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது, தற்போதைக்குதான் தில்லி செல்லவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com