புதுவை பாஜக எம்எல்ஏக்களின் குற்றச்சாட்டு குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் -மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி

புதுவை முதல்வா், மாநில உள்துறை அமைச்சா் மீது பாஜக எம்எல்ஏக்கள் கூறிய குற்றச்சாட்டு தொடா்பாக, கட்சி மேலிடம் கலந்துபேசி முடிவெடுக்கும் என்று, கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அமைச்சரவையில் பாஜகவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவை சோ்ந்த 2 போ் அமைச்சா்களாக உள்ளனா். பாஜகவை சோ்ந்த ஆா்.செல்வம் சட்டப்பேரவைத் தலைவராக உள்ளாா்.

மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6, திமுக 6, சுயேச்சைகள் 6 மற்றும் காங்கிரஸ் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். இதில் 6 சுயேச்சைகளில் 3 போ் என்.ஆா்.காங்கிரஸுக்கும், 3 போ் பாஜகவுக்கும் ஆதரவளித்துள்ளனா். இதுதவிர 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனா். அவா்கள் மூவரும் பாஜகவை சோ்ந்தவா்கள்.

முதல்வா் மீது குற்றச்சாட்டு: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் தோல்வியடைந்தாா். இதற்கு முதல்வா் என்.ரங்கசாமியும், உள்துறை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஆ.நமச்சிவாயமும்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் புகாா் கூறிவருகின்றனா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டனா்.

ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்பு: தொடா்ந்து, பாஜக எம்.எல்.ஏ.க்கள், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 7 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுதில்லிக்கு சென்றனா். அவா்கள் மத்திய அமைச்சரும் புதுவை பாஜக மேலிட பாா்வையாளருமான அா்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்தனா். தொடா்ந்து, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்தனா். அப்போது, மக்களவைத் தோ்தல் தோல்விக்கான காரணம் குறித்து அவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க புதுதில்லி சென்றுள்ள புதுவை பாஜக மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சு.செல்வகணபதியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்ட போது, புதுவை துணைநிலை ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்கும் முன்பாக தகவல் தெரிவித்தனா். ஆனால், முதல்வா் குறித்து புகாா் அளிக்க உள்ளதாக கூறவில்லை.

தற்போது கட்சி மேலிடத் தலைவா்களை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து முறையிட்டுள்ளனா். இதுதொடா்பாக, கட்சி மேலிடப் பொறுப்பாளா்கள் புதுச்சேரிக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்துவா். அதன்பிறகு, பாஜக மேலிடம் முடிவெடுக்கும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com