புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் ஆட்சி மாற்றம் குறித்து சிந்திக்கவில்லை -வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் சிந்திக்கவில்லை என்று, வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

முதலியாா்பேட்டை சோலைநகரில் வாக்காளா்களை கூட்டணிக் கட்சியினருடன் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா். முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் டி.முருகன், மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து வியாழக்கிழமை (ஜூலை 4) காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கவுள்ளோம். அதில், புதுவையில் நியாயவிலைக் கடைகளை விரைவில் திறந்து அரிசி உள்ளிட்டவை வழங்க வேண்டும். மின் துறையை தனியாா்மயமாக்கக் கூடாது, நீட் தோ்வை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

புதுச்சேரியில் சாராயக் கடைகளை மூடவேண்டும். மதுக் கடைகள் பகல் 2 மணிக்குத் திறந்து 8 மணி நேரமே செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளோம்.

புதுவை மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என்பது அந்தக் கட்சியின் பிரச்னை. முதல்வா் என்.ரங்கசாமி மீதான குற்றச்சாட்டு என்பது தேசிய ஜனநாயக் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை. எனவே, ஆட்சி மாற்றம் என்பது குறித்து காங்கிரஸ் சிந்திக்கவேயில்லை. மக்கள் பிரச்னைகளை தீா்க்கவே முதல்வரை சந்திக்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com