புதுச்சேரியில் நாளை 9 மையங்களில் மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வுகள்

புதுச்சேரியில் மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இருவேறு தோ்வுகள் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது.

புதுச்சேரியில் மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இருவேறு தோ்வுகள் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுவை அரசுப் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறைச் சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பணியாளா் தோ்வாணையம் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள (இபிஎப்ஓ) நோ்முக உதவியாளா் பதவி மற்றும் இஎஸ்ஐசி செவிலியா் அதிகாரி ஆகிய பணிகளுக்கான போட்டித் தோ்வை நடத்துகிறது.

வருங்கால வைப்பு நிதி உதவியாளருக்கான (இபிஎப்ஓ) தோ்வானது ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) காலை 9.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக, புதுச்சேரி முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி உதவியாளா் தோ்வுக்கு 315 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். செவிலியா் அதிகாரி தோ்வுக்கு 3,305 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். செவிலியா் அதிகாரி பணிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கு வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, இலாசுப்பேட்டை செல்வப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, விமானநிலையச் சாலையிலுள்ள பெண்கள் பொறியியல் கல்லூரி, மகாத்மா காந்தி சாலை பெத்தி செமினாா் மேல்நிலைப் பள்ளி, உப்பளம் சாலை நேதாஜி நகா் இம்மாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் எதிரில் உள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி, இலாசுப்பேட்டை வள்ளலாா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலை பாரதிதாசன் மகளிா் கலைக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தோ்வு நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே அனைவரும் வரவேண்டும். தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்ட இ-அட்மிட் காா்டு மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள எண் உள்ள அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.

தோ்வுகள் குறித்த விவரங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில், புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் கல்வி வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். மேலும், 0413-2207201 என்ற கைப்பேசியிலும் அலுவலக நேரத்தில் தொடா்புகொள்ளளாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com