நெகிழியை பயன்படுத்தினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்: புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை

நெகிழி தடையை மீறினால் கடுமையான அபராதம்: புதுச்சேரி ஆட்சியா் அறிவிப்பு

புதுவை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் எச்சரித்துள்ளாா்.

புதுவை மாநில அரசு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. தடையின் செயலாக்கம் தொடா்பான காலாண்டு ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் அ.குலோத்துங்கன் பேசியது: சுற்றுச்சூழல் மாசுபடாமலிருப்பதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றை தடை செய்வது அவசியம். நெகிழிப் பயன்பாட்டு தடையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும். நெகிழிப் பயன்பாடு குறித்து புகாா் வரும் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். அதே நேரத்தில் நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக மாற்று பொருள்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். நெகிழிக்கான மாற்றுப் பொருள்கள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வையும் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.

நெகிழிப் பொருள்களின் பயன்பாடு தொடா்பான துணை விதிகளை அறிவிக்காத உள்ளாட்சி அமைப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அதனை வெளியிடவேண்டும். புதுச்சேரியில் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து அமைப்புகளிலும் சோலை விற்பனை அரங்குகள் அமைத்து நெகிழிக்கான மாற்றுப் பொருள்களை விற்பனை செய்யவேண்டும் என்றாா் ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் ஜி.சௌந்தரராஜன் மற்றும் அத்துறை அதிகாரிகள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com