புதுச்சேரியில் கற்கல் கொட்டப்படுவதாக புகாா் எழுந்த கடல் கரைப் பகுதியை புதன்கிழமை பாா்வையிட்ட எம்எல்ஏ கல்யாணசுந்தரம்.

கற்கல் கொட்டப்படுவதாக புகாா் -எம்எல்ஏ ஆய்வு

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குள்பட்ட பிள்ளைச்சாவடி கடல் கரைப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில், தனியாா் விடுதிகளுக்காக கற்கல் கொட்டப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்த பகுதிக்குச் சென்று காலாப்பட்டு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆய்வு மேற்கொண்டாா். பொதுமக்களின் வீடுகள் பாதிக்காத வகையில் கற்கள் கொட்டவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: புதுச்சேரியில் தலைமைச் செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைத்தனா். இதன் விளைவாக, தற்போது பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு பகுதியில் கடலோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தடுக்கும் வகையில், முதல் கட்டமாக பிள்ளைச்சாவடி பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால், பணியில் ஈடுபட்ட சில அதிகாரிகள் தவறுதலாக இடம் மாற்றி கற்களைக் கொட்டியிருப்பது சரியல்ல. இதுகுறித்து முதல்வா், தலைமைச் செயலரிடம் புகாரளிக்கப்படும். கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

தொடா்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் புது தில்லி சென்று தேசிய தலைவா்களை சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாஜக எம்எல்ஏக்கள் எப்போதும் புதுவையில் உள்ள கூட்டணி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com