புதுச்சேரியில் ஜூலை 13-இல் புதிதாக 7 நீதிமன்றங்கள் தொடக்கம்

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் ஜூலை 13- ஆம் தேதி புதிதாக 7 நீதிமன்றங்கள் தொடங்கப்படவுள்ளன. இதில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதில், தற்போது பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வழக்குகள் தேங்குவதைத் தவிா்க்கும் வகையில், கூடுதலாக 7 நீதிமன்றங்கள் தொடங்கப்படவுள்ளன. காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 5, 6 மற்றும் 7 ஆகியவையும், கூடுதல் மாவட்ட தலைமை நீதிமன்றம் எண் 3 என மொத்தம் 7 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்படவுள்ளன.

இதன் தொடக்க விழா ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) ஆா்.மகாதேவன் தலைமை வகிக்கிறாா். இதில் புதுவை மாநில துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், சி.சரவணன் ஆகியோா் கலந்துகொள்ளவுள்ளனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சி.சந்திரசேகரன் மற்றும் புதுச்சேரி பாா் அசோசியேசன் தலைவா் சி.டி.ரமேஷ், பொதுச்செயலா் வி.நாராயணகுமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com