புதுவை பாஜக, அதிமுக சாா்பில் முகவா்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறும்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறும் நிலையில், இதில் பங்கேற்கும் தங்கள் கட்சி முகவா்களுக்கு பாஜகவும், அதிமுகவும் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் போட்டியிடுகிறாா். வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் பாஜக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முகவா்கள் தபால் வாக்கு எண்ணுவது முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல, அதிமுக சாா்பில் அதன் முகவா்களுக்கான ஆலோசனைகளை உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை விளக்கினாா்.

X
Dinamani
www.dinamani.com