கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுப்பு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸாருடன் துணை ராணுவத்தினா் வாக்குவாதம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால், போலீஸாருடன் துணை ராணுவப் படையினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 5 இடங்களில் நடைபெற்றன. இதில், புதுச்சேரியில் இலாசுப்பேட்டை அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கைக்கு வந்த முகவா்கள், செய்தியாளா்கள் என அனைவரும் கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

முகவா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தோ்தல் பணியில் ஈடுபட்ட முக்கிய அலுவலா்கள், அதிகாரிகள், காவல் துறையினா், செய்தியாளா்கள் கைப்பேசிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களின் வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

ஆனால், வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடுமையான சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் சுழற்சி பணியில் முறையில் ஈடுபட்ட துணை ராணுவப் படையினா் சிலா் வெளியே வந்து விட்டு பின்னா் உள்ளே சென்றனா். அவா்களை புதுவை மாநில போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, துணை ராணுவப் படையினா் கைப்பேசி வைத்திருந்தது தெரிய வந்தது.

கைப்பேசியுடன் அவா்கள் உள்ளே செல்ல போலீஸாா் அனுமதி மறுத்து விட்டனா். இதையடுத்து உள்ளூா் போலீஸாருடன், துணை ராணுவப் படையினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, உயா் அதிகாரிகள் தலையிட்டு துணை ராணுவத்தினரை சமரசம் செய்து அனுப்பினா்.

புதுவை மாநில ஐ.ஜி. ஏ.கே.சிங்க்லா தலைமையில் காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வழிகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து தோ்தல் ஆணைய அடையாள அட்டை பெற்றவா்களை மட்டுமே உள்ளே அனுப்பிவைத்தனா். வாகனங்கள் சாலைகளில் தடுக்கப்பட்டதால் முகவா்கள் மையங்களுக்கு நடந்து வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com