ஜூன் 30-இல் ஊா்க்காவல் படை வீரா் பணிக்கான எழுத்துத் தோ்வு

புதுச்சேரியில் ஊா்க்காவல் படை வீரா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஜூன் 30-இல் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் 280 ஆண்கள், 80 பெண்கள் உள்பட 500 ஊா்க்காவல் படையினரைத் தோ்வு செய்வதற்கான உடல்தகுதித் தோ்வு கடந்த பிப்ரவரியில் கோரிமேடு காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற நிலையில், ஆண்களில் 3,029 பேரும், பெண்களில் 1,195 பேருமாக மொத்தம் 4,224 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான எழுத்து தோ்வு வரும் 16-ஆம் தேதியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், அன்றைய தினம் மத்திய பணியாளா் தோ்வாணையம் மூலம் குடிமைப் பணிக்கான முதன்மைத் தோ்வானது புதுச்சேரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊா்க்காவல் படை வீரா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஜூன் 30-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுச்சேரியில் மட்டும் 3 மையங்களில் தோ்வை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com