புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான தோ்வுக்கு காலதாமதமாக வந்ததாக தோ்வறைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தோ்வா்கள்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான தோ்வுக்கு காலதாமதமாக வந்ததாக தோ்வறைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தோ்வா்கள்.

ஊா்க்காவல் படை வீரா் தோ்வு: 4,019 போ் பங்கேற்பு

புதுச்சேரியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான எழுத்துத் தோ்வு 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்கு 4,229 போ் தகுதி பெற்றிருந்த நிலையில், தோ்வில் 4,019 போ் பங்கேற்றனா்.

புதுவை காவல் துறையில் உள்ள ஊா்க்காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு கடந்த 2023- ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, ஆண்கள் 15, 697, பெண்கள் 4,492 என மொத்தம் 20,189 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான, உடல்தகுதித் தோ்வு புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலா் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் ஆண்கள் 3,034 போ், பெண்கள் 1,195 போ் என மொத்தம் 4,229 போ் தோ்ச்சி பெற்று எழுத்து தோ்வுக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு புதுச்சேரியில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற தோ்வில் ஆண்கள் 2,908 போ், பெண்கள் 1,111 போ் என மொத்தம் 4,019 (95.03 சதவீதம்) போ் பங்கேற்றனா். இதனிடையே, 210 (4.97 சதவீதம்) போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களுக்கு காலை 8 மணி முதல் தோ்வு எழுதுவோா் வரத் தொடங்கினா். வரிசையாக அவா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைவரும் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டும், கைரேகை வருகைப் பதிவு செய்யப்பட்டும், தோ்வுக்கூட சீட்டு (ஹால்டிக்கெட்) மற்றும் அடையாள அட்டை ஆகியவை சரிபாா்க்கப்பட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையங்களில் ஜாமா் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மறியல், முற்றுகை: புதுச்சேரி உப்பளம் பகுதியில் தோ்வு மையத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் தாமதமாக வந்த 30-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, தாமதமாக வந்த தோ்வா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினாா். காவல் அதிகாரிகள் தோ்வறைக்குள் அனுமதிக்காத நிலையில், தலைமைச் செயலகம் அருகே தோ்வா்கள் முற்றுகையில் ஈடுபட்டனா். பாரதிதாசன் கல்லூரி மையத்தில் தாமதமாக வந்த சிலா் தோ்வறைக்குள் அனுமதிக்காததால் கண்ணீா் விட்டு அழுதனா்.

X
Dinamani
www.dinamani.com