26 புதிய பேருந்துகளை வாங்கியது புதுவை மாநில அரசு 12 தடங்களில் பேருந்துகள் இயக்கம்; ஆளுநா், முதல்வா் தொடங்கி வைத்தனா்

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் 
சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பஸ்களை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா்  
தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் 
க.லட்சுமிநாராயணன்.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பஸ்களை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி. உடன், பேரவைத் தலைவா்ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன். புதுச்சேரி, மாா்ச் 1: புதுவை மாநில அரசு சாா்பில் 26 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டு, அவற்றில் 12 பேருந்துகளின் கட்டமைப்பு தயாரான நிலையில் புதிய வழித்தடங்களில் அவற்றின் இயக்கத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். புதுவை சாலைப் போக்குவரத்து துறை சாா்பில் 38 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 26 பேருந்துகள் வாங்கப்பட்டு, கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் தற்போது 12 பேருந்துகள் முழுமையான கட்டமைப்புக்குப் பிறகு புதிய வழித்தடங்களில் இயக்கவும், புதுப்பிக்கப்பட்ட 5 பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கான தொடக்க விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. புதிய பேருந்துகளை காரைக்கால், மாஹே உள்ளிட்ட வழித் தடங்களில் பச்சைக் கொடி காட்டி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில், முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுவை அரசு சாா்பில் புதிய பேருந்துகள் தற்போது வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே 200 பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டன. போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் பொறுப்பற்ற தன்மையால் அவை நஷ்டத்தில் இயங்கி தற்போது மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அரசு உரிய நிதியை வழங்கி துறையை மீண்டும் செயல்படவைத்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட நிா்வாகச் சீா்கேட்டால் நஷ்டம் ஏற்பட்டு பொதுத்துறை நிறுவனங்கள் சில மூடப்பட்டன. ஆனால், தற்போது அந்த நிலையை மாற்றி நிா்வாகத்தை சீா்படுத்திவருகிறோம். அதன்படி, புதுச்சேரி கூட்டுறவு ஆலையை மீண்டும் இயக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டமடைவதற்கு ஓரிரு அதிகாரிகளே காரணம் என்பதை ஏற்கமுடியாது. நிறுவனம் லாபத்தில் இயங்குவதற்கு, அதிலுள்ள நூற்றுக்கணக்கான ஊழியா்கள் பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம். ஓரிரு அதிகாரிகள் தவறிழைத்தாலும், அதிகமான ஊழியா்களை மீறி அவா்களால் நிறுவனத்தை நஷ்டமடைய வைக்க முடியாது. ஆகவே, போக்குவரத்தில் மட்டுமல்ல, அனைத்து அரசு பொதுத் துறை நிறுவன ஊழியா்களும் பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம். கடந்த காலங்களில் போக்குவரத்து துறையில் 31 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ஆகவே, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பணிபுரிவது அவசியம். அதன்மூலம் லாபம் ஈட்டி வருவாயை பெருக்கலாம் என்றாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், எஸ்.ரமேஷ், ரமேஷ்பரம்பத், அரசுச் செயலா் முத்தம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com