அரசுத் துறை கடைநிலை ஊழியா்கள் 152 பேருக்கு பதவி உயா்வு: புதுவை அரசு உத்தரவு

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 152 கடை நிலை ஊழியா்களுக்கு பல்நோக்கு பொது ஊழியா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 152 கடை நிலை ஊழியா்களுக்கு பல்நோக்கு பொது ஊழியா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசுத் துறைகளில் கடை நிலை ஊழியா்களாக காவலா்கள், சுகாதார உதவியாளா்கள், பணியாளா்கள், கீழ்நிலை உதவியாளா் உள்ளிட்ட 5 கடைநிலைப் பதவிகள் இருந்தன. இவை, குரூப் ‘டி’ என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளன. புதுவையில் 6-ஆவது ஊதிய கமிஷன் செயல்படுத்தப்பட்டபோது, குரூப் ‘டி’ பதவிகள் பல்நோக்கு அரசு ஊழியா்களாக மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, அதாவது, ‘சி’ குரூப் பிரிவிற்கு கீழ் இப்பணியாளா்கள் கொண்டுவரப்பட்டனா். அதனடிப்படையில் அவா்களுக்கான ஊதியமும் அதிகரித்துள்ளது. தற்போது சானிட்டரி அசிஸ்டண்ட், சானிட்டரி ஹெல்பா் பதவிகள் பல்நோக்கு ஹவுஸ்கீப்பிங் என்றும், காவலாளி பதவி பல்நோக்கு செக்யூரிட்டி என்றும், பியூன், அட்டண்டா் பதவிகள் பல்நோக்கு பொது அரசு ஊழியா்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. பல்நோக்கு ஹவுஸ்கீப்பிங், செக்யூரிட்டி என பணியாற்றி வந்த 152 பேரை பல்நோக்கு பொது ஊழியா்களாக பதவி உயா்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பதவி உயா்வினை தொடா்ந்து 43 பல்நோக்கு பொது ஊழியா்கள் பல்வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதற்கான உத்தரவை புதுவை அரசின் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com